Tuesday, December 30, 2008

மின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் வாழ்க்கை நடத்த முடியுமா?

சில நாட்களுக்கு முன்னர், இலங்கை தமிழருக்கு ஆதரவாக உண்ணாவிரதம் என்ற பெயரில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சி வேடிக்கையாகவும் வேதனையை அளிக்கக் கூடியதாகவும் இருந்தது.


முதலில் உண்ணாவிரத நேரத்தைப் பார்போம். காலை 8.00 மணியிலிருந்து பிற்பகல் 4.00 மணி வரை சாப்பிடாமல் இருப்பதின் பெயர் உண்ணாவிரதமா? குறைந்த பட்சம் மாலை 6.00 மணி வரை அதாவது 10 மணி நேரம் கூட ஒரு நல்ல நோக்கத்திற்காக உணவருந்தாமல் இருக்க முடியாதா?

மற்றொரு மிகப் பெரிய வேடிக்கை. சட்டங்களின் கட்டுப்பாடு இருப்பதால், தங்களால் உண்மையான உணர்ச்சிகளை வெளிப்படுத்த முடிய வில்லை என்று சிலர் கூறியது. சட்டத்தின் கட்டுப்பாடு என்பது ஒருவரது பேச்சுகள் நாட்டின் பிரிவினை வாதத்தைத் தூண்டும் வகையிலும் பொது அமைதிக்கு விரோதமாகவும் இருக்கக் கூடாது என்பது மட்டுமே.

தமிழன் பணத்தில் தனித்தனியாக பலகோடி சம்பாதிக்கும் இவர்கள் அனைவரும் சேர்ந்து கொடுத்து சில லட்சங்கள் மட்டுமே. அதுவும் நம்மூர் குப்பன் சுப்பன் திருமண விழாவில் நடப்பது போல அண்ணார் 500 ரூபாய் இன்னார் 1000 ரூபாய் என்பது போன்ற விளம்பர அறிவிப்புகள் வேறு.

மேடையில் இருந்த எத்தனை பேருக்கு முதலில் இந்தியத் தமிழனைப் பற்றி (சிலருக்கு தமிழே தடுமாட்டம்) ஓரளவிற்காவது தெரியும்? இந்தியத் தமிழனைப் பற்றியே ஓரளவு கூட தெரியாதவர்களால் எப்படி இலங்கைத் தமிழன் படும் பாடு பற்றி புரிந்து கொள்ள முடியும்?

பொது விஷயங்களில் ஈடுபாடு காட்டவும் கருத்து தெரிவிக்கவும் அனைவர்க்கும் உரிமை உண்டு. அதை யாரும் குறை கூற முடியாது. அதே சமயம், பெருமளவு அரசியல் அறிவோ அல்லது அனுபவ அறிவோ (ஒரு சிலரே இதற்கு விதிவிலக்கு) இல்லாத இவர்களின் கருத்துள்ள (?) சொற்பொழிவுகள் விளம்பரங்களுடன் தொலைக்காட்சிகளில் நேரடி ஒளிபரப்பு. அந்த பேச்சுகள் பற்றி அடுத்த நாள் தினத்தாள்களில் பக்கம் பக்கமாக செய்திகள். இது மட்டுமல்ல, ஓரளவுக்கு கல்வி கற்ற மற்றும் இலக்கிய ஆர்வமுள்ளதாக கருதப் படும் பதிவர் வட்டத்தில் கூட இந்த உரைகளுக்கு நேரடி வர்ணனை. மேலும் அரசியல்வாதிகள் இவர்களுக்கு கொடுக்கும் முக்கியத்துவம். உண்மையில் என்மனம் நொந்து நூலாகி பாரதியையே "நெஞ்சு பொறுக்குதில்லையே" என்று துணைக்கு அழைத்தது.

எங்கே போய் கொண்டிருக்கிறது என் தமிழகம்? மின்மினி பூச்சிகள் தரும் மயக்கத்தில் நாம் சூரிய சந்திரரையும் மின்சார விளக்குகளையும் புறம் தள்ளுகின்றோமோ? மின்மினி பூச்சிகள் தரும் வெளிச்சத்தில் நம்மால் வாழ்க்கை நடத்த முடியுமா?

No comments: